பருத்தித்துறை கடற்றொழிலாளருக்கு நேர்ந்த கதி : "அவர்கள் கொள்ளையர்கள் அல்ல" - தமிழக பத்திரிக்கைகளுக்கு பதிலடி!
அண்மையில் யாழ்ப்பாணம், பருத்தித்துறையைச் சேர்ந்த கடற்றொழிலாளர் ஒருவர், தமிழக கடற்றொழிலாளர்களால் பிடித்துச் செல்லப்பட்டு மிகக் கொடூரமாக சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டமை தொடர்பில் அரசாங்கம் உரிய வகையில் விசாரணைகளை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், பாதிக்கப்பட்ட கடற்றொழிலாளருக்கு நீதியைப் பெற்றுக் கொடுக்க வேண்டுமென, வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் கோரிக்கை விடுத்துள்ளார்.
அத்துடன், தமிழக கடற்றொழிலாளர்களின் இத்தகைய செயற்பாடு கண்ணியமற்ற, கோழைத்தனமான செயற்பாடெனவும் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் தனது கண்டனங்களையும் தெரிவித்துள்ளார். அதேநேரம், தமிழக கடற்றொழிலாளர்களால் பிடித்துச் செல்லப்பட்ட குறித்த கடற்றொழிலாளரை, தமிழகப் பத்திரிக்கைகள் கடற்கொள்ளையன் என பொய்யாகச் சித்தரித்துள்ளமை ஊடக ஒழுக்கநெறிகளை மீறும் செயலாகும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். சோமாலியா உள்ளிட்ட ஆபிரிக்க கடற்பரப்புக்களினூடாக கப்பல்கள் செல்லும்போது கடற்கொள்ளைகள் இடம்பெறுவதாக அறிந்திருக்கின்றோம்.
ஆனால் இங்கே எமது கடற்றொழிலாளர்கள் கொள்ளையிடுவதற்கான அவசியமில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்தநிலையில், இந்த விடயத்தில் வடமாகாண ஆளுநர் மற்றும் கூட்டுறவு பிரதி அமைச்சர் உபாலி சமரசிங்க ஆகியோர் உரிய வகையில் விசாரணைகளை மேற்கொண்டு உண்மையை வெளிக்கொணர்வதுடன், இந்த கொடூர செயற்பாட்டிற்குரிய நீதியையும் நிலைநாட்டவேண்டும் என்றும் நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் கோரிக்கை விடுத்துள்ளார்.
(வீடியோ இங்கே )